தேனி அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. 126 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட பழைய, புதிய ஆயக்கட்டு பாசன பகுதி நிலங்கள் பயன்பெறுகின்றன.
அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அகமலை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் போதிய அளவு மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறையத்தொடங்கியது.
பெரியகுளம் வட்டாரப் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த ஜூன் 30 முதல் அணையில் 13 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர் நீர் திறப்பால் அணையின் நீர்மட்டம் சரிந்தது. எனவே கடந்த 9ஆம் தேதி முதல் 3 கன அடியாக குறைக்கப்பட்டது.
இதனால் கடல் போல் காட்சியளித்த சோத்துப்பாறை அணை தற்போது குளம் போல் காட்சியளிக்கிறது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65.93 அடியாகவும் நீர் இருப்பு 26.82 கன அடியாகவும் இருக்கின்றது.
எப்போதும் இல்லாத நிலையில் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.