இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக புதிய வகை கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கடந்த ஒரு மாதம் இடைவெளியில் இங்கிலாந்தில் இருந்து தமிழ்நாடு வந்த பயணிகளின் பட்டியலை எடுத்து, அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநில சுகாதாரத் துறை அலுவலர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஶ்ரீரெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர், லண்டனில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தனது பெற்றோரை காண்பதற்காக மனைவி, மற்றும் இரண்டு குழந்தைகளுடன் டிசம்பர் 20ஆம் தேதி சென்னை விமான நிலையம் வந்தார்.
இவர்கள் நால்வருக்கும் டிசம்பர் 24ஆம் தேதி கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், மென்பொருள் பொறியாளருக்கு மட்டும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், புது வகை வைரஸ் தொற்று பரிசோதனைக்காக அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேயில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட உள்ளது.
அதேபோல், துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வழியாக ஆண்டிபட்டி வந்தவர்களில், 5 வயதுடைய சிறுவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த சிறுவன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.