தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெருகிவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக சித்த மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிப்பதற்கு அரசு அனுமதியளித்து, முதல்கட்டமாக சென்னையில் இரண்டு சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டன.
இந்த இரு மையங்களிலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில், நல்ல பலன் கிடைத்ததால் தமிழ்நாடு முழுவதும் சித்தா கோவிட்-19 கேர் சென்டர்கள் திறப்பதற்கு அரசு ஆர்வம் காட்டியது. இந்நிலையில், சென்னையைத் தொடர்ந்து தற்போது தேனி மாவட்டத்திலும் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே உள்ள மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் 100 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவச் சிகிச்சை மையம் இன்று செயல்பாட்டிற்கு வந்தது. இதில் ஒரு மருத்துவர், நான்கு செவிலியர் என சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்கள் சுகாதாரத் துறையினரின் ஆலோசனையின்பேரில் இந்த மையத்தில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குச் சிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கிறது.