தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் கிம்ப்டன் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த தொண்டு நிறுவனம் ஆதரவற்றோர் மற்றும் பசியின் பிடியில் வறுமையில் வாழும் குழந்தைகள் காப்பகமாகவும், கல்வி நிறுவனமாகவும் செயல்பட்டு வந்தது. 2010 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கிம்ப்டன் மறைவுக்கு பிறகு அந்தோணி பால்சாமி என்பவர் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமனம் ஆனார்.
இந்நிலையில், நிர்வாக இயக்குநராக இருக்கும் பால்சாமி பல மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருவதாக இந்நிறுவனத்தில் படித்து முடித்த முன்னாள் மாணவ மாணவியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், 2010ஆம் ஆண்டு இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி இறப்பில் மர்மம் உள்ளதாகவும், விடுதியில் உள்ள மாணவிகளுக்கு இரவில் பாலில் மயக்க மருந்து கொடுத்து அவர்களை பாலியல் தொந்தரவு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த தொண்டு நிறுவனத்தின் சொத்துகளை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அந்நிறுவனத்தின் மீது எழுகின்ற மேற்குறிப்பிட்ட புகார்கள் குறித்து விசாரணைக்குழு அமைத்து நடவடிக்கை எடுத்திடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்தவர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.