தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம். இங்குள்ள குமுளி, போடிமெட்டு, கம்பம் மெட்டு ஆகிய பிரதான மலைச்சாலைகள் கேராளவின் இடுக்கி மாவட்டத்தை இணைக்கிறது. எல்லைகளில் இரு மாநில காவல், சுங்கத்துறையினர் தினசரி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள குமுளி சோதனைச்சாவடியில் கேரள சுங்கத்துறையினர் இன்று (பிப்.26) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி வந்த கேரள பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சா, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான ஒரு கிலோ கஞ்சா எண்ணெய் கைப்பற்றப்பட்டது.
பின்னர், பிடிப்பட்டவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆந்திராவில் இருந்து கேராளவின் இடுக்கி மாவட்டம் கட்டப்பணை பகுதியைச் சேர்ந்த டோமி என்பவருக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, இடுக்கி மாவட்டம் கட்டப்பணையை சேர்ந்த பிரதீப், மகேஷ், ரெனி ஆகிய மூன்று நபர்களை கைது செய்த சுங்கத்துறையினர், அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.