கேரளா: இடுக்கி மாவட்டத்திலுள்ள கட்டப்பனைக்கு ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இடுக்கி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திடீர் வாகன சோதனைகளும் மற்றும் அங்குள்ள அனைத்து சோதனை சாவடிகளும் உஷார் படுத்தப்பட்டன.
குமுளி அருகே உள்ள கட்டப்பனை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
முதலில், நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் கிடைக்காத நிலையில், காரில் இருந்தவர்கள் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் வலுத்ததால், மீண்டும் காரை முழுமையாக சோதனை நடத்தினார்கள். அப்போது கார் சீட்டின் அடியில் ரகசிய அறை ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் சோதனை செய்தபோது, ஒரு 1 கோடியே 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இந்த பணம் யாருக்காக கடத்தி செல்லப்படுகிறது, எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என்ற பல கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் இருந்த மலப்புரத்தை சேர்ந்த பிரதீஷ், மூவாட்டுபுழாவை சேர்ந்த ஷபீர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை