2019ஆம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியிருப்பதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் உதித்சூர்யா அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் கைதாகினர்.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை, தருமபுரி, உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அவரது பெற்றோர், இடைத்தரகர்கள் என இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் வெளிவந்தனர்.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரசீத் என்பவர் செயல்பட்டிருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது. அவரை பிடிக்க சிபிசிஐடி காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வந்தன. ஓராண்டு ஆகியும் கிடைக்காத நிலையில், இடைத்தரகர் ரசீத் இன்று(ஜன.7) தேனி நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் சரணடைந்தார்.
அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பெரியகுளம் கிளைச் சிறையில் ரசீத் அடைக்கப்பட்டார். இதனிடையே இடைத்தரகர் ரசீத்தை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி தருமாறு சிபிசிஐடி சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு நாளை (ஜனவரி 8) விசாரணைக்கு வர உள்ளது.
சரணடைந்த ரசீத் 6 வருடங்களாக கேரளாவில் நீட் பயிற்சி மையம் நடத்தி வந்துள்ளார். சிபிசிஐடி விசாரணையில் நீட் தேர்வில் மேலும் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழும் தமிழ்நாடு!'