கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதுதான் தற்போது அரசுக்கு இருக்கும் மிகப்பெரிய டாஸ்க். தமிழ்நாட்டில் சென்னை போன்ற நகரங்களுக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டத்தில் கரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. தற்போது தேனி மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்து வருகிறது.
இந்த மாவட்டத்தில் கரோனாவால் கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரையில் மொத்தம் 43 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 42 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதற்கிடையில் போடியைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார். தொடர்ந்து மே மாதத்தில் 23 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்தது. தொடர்ந்து 70 நாள்களாக நீடித்த பொதுமுடக்கத்தால் கட்டுக்குள் இருந்த கரோனா நோய்த்தொற்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு வேகமாகப் பரவத் தொடங்கியது.
மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் தேனி மாவட்டத்தில் ஏற்பட்ட மொத்த பாதிப்பு சதத்தைக் கூட எட்டாத நிலையில், ஜூன் மாதத்தில் மட்டும் 500க்கும் (527 பேர்) அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதை விஞ்சும் அளவுக்கு ஜூலை மாதத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்தது. கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
குறைந்த மக்கள்தொகையை உடைய தேனியில் கரோனா சமூக பரவலானதற்கான காரணத்தை சமூக ஆர்வலர் அன்பு வடிவேலிடம் கேட்கையில், “ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஏற்ட்ட பொது போக்குவரத்து இயக்கம், சென்னை உள்ளிட்ட சிவப்பு மண்டலங்களிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியவர்களிடமிருந்து கரோனா பரவியுள்ளது. அரசு மதுபான கடைகளைத் திறந்ததுகூட ஒரு காரணம்தான். மக்களுக்கு ஒவ்வொரு இயக்கமும் இயல்பாகவே கரோனா சாதாரணமாக பரவத் தொடங்கியது.
குறிப்பாக, கரோனா பாதித்தவர்கள் வீட்டினை தனிமைப்படுத்துவது, அதன் பிறகான நாள்களில் அவ்வீட்டைச் சுற்றியிருப்பவர்களைக் கண்காணிப்பது அரசு அலுவலர்களிடம் இருப்பதில்லை. வெறுமனே பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒரு ஜோடனையாகச் செய்து வருகின்றனர்” என்றார்.
இந்த மாவட்டத்தில் மக்களிடையே கரோனா விழிப்புணர்வு குறைவாக உள்ளதையும் காரணம் என்கிறார்கள் ஒரு சாரர். ஒரே தெருவை சேர்ந்த 46 பேர் மினி ஆட்டோவில் இறுதி சடங்கிற்கு சென்று வந்த அவலமும் தேனியில் அரங்கேறியுள்ளது. இதனால் அந்த ஆட்டோவில் சென்ற அத்துணை பேருக்கும் கரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
“கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை சோதித்து அறிவதில் தாமதம், கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார் மற்றும் அவருடன் தொடர்பிலிருந்தவர்களை பரிசோதிப்பதில் அலட்சியம் என சுகாதாரத் துறையினர் அலட்சியம் காட்டுகின்றனர். ஆம்புலன்ஸ் இல்லை நீங்களாவே வாகனம் ஏற்பாடு செய்து வாருங்கள் என்றால், இந்த இக்கட்டான சூழலி பொதுமக்கள் என்ன செய்வோம். பாதிக்கப்பட்ட ஒருவரை தனிமைப்படுத்த தாமதிக்கும்போது கரோனா விரைந்து பரவத்தானே செய்யும்” என குற்றஞ்சாட்டுகிறார் கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த சீனிராஜ்.
இதையெல்லாம் விட கொடுமையானது உயிரிழப்பிற்கு பிறகு பரிசோதனை முடிவுகள் வெளியாவதுதான். இந்த மாவட்டத்தில் கம்பம், பூதிப்புரம், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கரோனா அறிகுறியால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அவர்களது பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனை நிர்வாகம் இதை சம்பந்தப்பட்டவர்களிடம் எதுவும் சொல்லாமல் உரியவர்களிடம் உடலை ஒப்படைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்ற பலருக்கும் கரோனா உண்டாகும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தேனி மாவட்ட அரசு மருத்துவமனைக் கல்லூரி மருத்துவர் இளங்கோவனிடம் கேட்டபோது, “மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே கரோனா பரவலுக்கு காரணம். சளி, காய்ச்சல், உடல் சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பின்னர் அங்கு வழங்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றி பரிசோதனை செய்து கொள்ளலாம்.
ஆனால், அதை விடுத்து மருத்துவர்களின் அறிவுரை இன்றி மருந்தகங்களில் தனியாக மருந்துகள் வாங்கி உட்கொள்வது போன்ற காரணங்களால்தான் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இப்படி, 70% நோய் பாதிப்பு ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சவால்கள் ஏற்படுகின்றன. மேலும் உயிரிழப்புகளில் பெரும்பாலானோர் சர்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, நுரையீரல் உள்ளிட்ட துணை நோயினால்தான் அதிகம் பாதிக்கப்பட்டுகிறார்கள்.
இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில்தான் விலையுயர்ந்த உயிர்காக்கும் மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. சிகிச்சை முறைகளும் தனியார் மருத்துவமனைகளோடு போட்டி போடும் அளவிற்கு உள்ளன.
தரமான உணவுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து மக்களின் உயிர்காக்க அரசு போராடி வருகின்றது. மக்கள் இதனை உணர்ந்து அரசு பரிந்துரைத்த அறிவுரையின்படி செயல்பட்டால் கரோனாவை வென்று விடலாம். இதற்காக ஊரடங்குகூட தேவையில்லை” என்றார்.
இதையும் படிங்க: டாக்டர்கள் இல்லை... முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் - மீளுமா விருதுநகர்