தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு அருகாமையில் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்கள் குடியிருந்த வீடுகளை இடித்து அரசு தரைமட்டமாக்கி வெளியேற்றிவிட்டது. வலுக்காட்டாயமாக விரட்டப்பட்ட இவர்கள் தங்களுக்கான மாற்று இடத்தை போராடி கேட்டு தப்புக்குண்டு ஊராட்சிக்கு அருகில் பெறவும் செய்தனர்.
அனுமதிச் சீட்டு இருந்தும் அனுமதி மறுப்பு - மேய்ச்சலின்றி சாகும் மலை மாடுகள்
"அனைத்து வசதிகளுடனும் மக்களோடு மக்களாக வாழ்க்கையை நடத்தி வந்த எங்களை ஆக்கிரமிப்பில் வசிப்பதாகக் கூறி ஆள்நடமாட்டமே இல்லாத இடத்தில் குடி அமர்த்தி விட்டனர். அதுவும் அடிப்படை வசதிகளின்றி, குழந்தைகளை வைத்துக்கொண்டு இரவு நேரங்களில் பாம்பு, தேள், உள்ளிட்ட விஷ ஜந்துகளுக்கு பயந்து வாழ்வை நகர்த்தி வருவதாக அச்சம் கொள்கிறார்" செல்வி. இடம் வழங்கியதோடு சரி, இதுவரை எந்தவொரு அதிகாரிகளும் நேரில் வரவில்லை. கரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இழந்து வருமானமின்றி தவித்து வரும் எங்களுக்கு நிவாரணம் வழங்கக் கூட ஒருத்தரும் முன்வரவில்லை" என்றும் வேதனை தெரிவித்தார்.
"காற்று பலமாய் வீசினால் காலி இடம்தான் மிஞ்சும். அந்தளவிற்கு இங்கிருக்கும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்படியுள்ள வீடுகளில் அடிப்படை வசதி குறித்து சொல்லித்தான் தெரிய வேண்டுமா?" என்கிறார் கலைச்செல்வி. தொடர்ந்து பேசிய அவர், "குடிநீருக்காக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று தள்ளுவண்டியில் தண்ணீர் எடுத்து வருகிறோம். ஒரு வாரத்திற்கு தேவையான தண்ணீர் தேவைக்கு தள்ளுவண்டி, ட்ரம் ஆகியவற்றிற்காக 500 ரூபாய் வரை வாடகை செலுத்த வேண்டும். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் நாங்கள் தண்ணீருக்கு மட்டும் மாதம் 2000 ரூபாய் செலவு செய்வது என்பது எப்படி சரியானதாக இருக்கும்" என்றார்.
வாசனை இழந்த ஏலத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்!
இது குறித்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஜான்சி ராணி கூறுகையில், மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் படிக்க வேண்டும். பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு வீட்டிலிருந்தே மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடக்கின்றன. ஆனால் எங்கள் வீட்டில் மின்சார வசதி இல்லாததால் மொபைல் போன் மூலம் இணையதள வகுப்பில் பங்கேற்பதில் சிரமத்தில் உள்ளோம். இணையதள வகுப்பில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்பதால் செல்போனை சார்ஜ் ஏற்றுவதற்காக வீரபாண்டி தான் செல்ல வேண்டும். அதுவும் ஒரு மணி நேரம் சார்ஜ் ஏற்றுவதற்காக கடைக்காரர்களுக்கு ரூ.30வரை பணம் செலுத்தி படித்து வருவதாக தெரிவித்தார்.
வசதியோடு இருந்த வீட்டையும் இடித்து தரைமட்டமாக்கி விட்டு காலி இடத்தை கொடுத்த மாவட்ட நிர்வாகம் இவர்களின் சிரமங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது கொடுமை. குடியிருக்க ஒரு வீடு என்பதுதான் இவர்களின் கோரிக்கை. அடிப்படை வசதிகளையாவது அமைத்து தாருவர்களா என்பதுதான் இவர்களது ஏக்கம். இவை நிறைவேறுவது இனி அரசின் கையில்...