தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் நேற்று (மே.7) முதல் மதுபான கடைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. கரோனா வைரஸ் பரவலால், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், மதுபான கடைகளைத் திறப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம், கோடாங்கிபட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிராக, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுபான கடை அமைந்துள்ள கோடாங்கிபட்டி – போடேந்திரபுரம் சாலையின் நடுவே முள்செடிகள், கல், தென்னை மட்டைகள் உள்ளிட்டவைகள் மூலம் சாலையை மறைத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதினர் கூறுகையில், "கரோனா வைரஸ் அச்சத்தால், வெளியூரில் இருந்து மது வாங்க வருபவர்கள் கோடாங்கிபட்டி வழியாக அதிகம் வருகின்றனர். மது வாங்குபவர்கள் தங்களது கிராமத்திற்குள் நுழையக்கூடாது என்பதற்காகவே சாலைகளில் முள் செடிகளை வைத்துள்ளோம்" என்றனர்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜ் ஊர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் மதுபான விற்பனை எவ்வளவு?