தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், தன் பிரசவ தேதி நெருங்கியதால் மருத்துவமனை சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா சமூகப் பரவல் நிலையை எட்டியுள்ள நிலையில், அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதத்தில், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையின் முடிவில், அந்தப் பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில், சிகிச்சைகாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து கர்ப்பிணி பெண்ணின் வீட்டு உறுப்பினர்கள், உறவினர்கள் என அனைவரும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்பெண்ணின் கணவர் வீடு அமைந்துள்ள வடகரை பகுதி மற்றும் தாய் வீடான தாமரைக்குளம் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.
மேலும் தாமரைக்குளம் பேரூராட்சி, பெரியகுளம் நகராட்சியினர் இவர்கள் வசித்து வந்த குடியிருப்புப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தெருக்களை மரக்கட்டைகளால் அடைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : நெல்லையில் 11 நாள்களுக்குப் பிறகு மீண்டும் கரோனா - அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை