சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையானார்.
அவரை வரவேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமமுகவினர் மட்டுமின்றி அதிமுகவினரும் போட்டி போட்டுக்கொண்டு ஆதரவு சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். அவ்வாறு ஆதரவு சுவரொட்டிகள் ஓட்டுபவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிமுக நிர்வாகி ஒருவர் சசிகலாவின் வரவேற்பு சுவரொட்டியை ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று (பிப். 2) ஆண்டிபட்டி அதிமுக மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஒன்றியத் துணை செயலாளர் செல்லப்பாண்டி தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் சிலர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அதில், "தமிழ்நாட்டை வழி நடத்த வருகை தரும் அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர், எங்கள் புரட்சி தலைவியின் புனித அவதாரமே! வருக! வருக!" என்று அச்சிடப்பட்டிருந்தது.
ஆண்டிபட்டி பகுதியில் தொடர்ந்து 2ஆவது முறையாக சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகிகளால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சசிகலா வருகை: கையெடுத்து கும்பிட்ட அமைச்சர்