தேனி: உத்தமபாளையம் அருகே 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 6 ஆயிரம் கேரள லாட்டரி சீட்டுகளை விற்ற தேனி விசிக மாவட்ட துணை செயலாளரான ஆரோக்கியசாமி என்பவரை போலீசார் இன்று (ஜன.22) கைது செய்தனர்.
உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து உத்தமபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிலை மணி தலைமையில் ரோந்துப் பணி மேற்கொண்ட போலீசார் அனுமந்தன்பட்டி சர்ச் தெரு பகுதியில் சந்தேகப்படும் படியாக நடந்து சென்றவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதைத் தொடர்ந்து, போலீசார் அவரிடமிருந்த துணிப்பையை சோதனையிட்டனர். அதில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 6 ஆயிரம் கேரள லாட்டரிச் சீட்டுகள் இருந்தது தெரியவந்தது.
மேலும் போலீசாரின் விசாரணையில், அந்நபர் விசிகவில் தேனி மாவட்ட துணைச்செயலாளர் என்பதும் உத்தமபாளையம் பேரூராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலருமான ஆரோக்கியசாமி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உத்தமபாளையம் காவல் துறையினர் ஆரோக்கியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போதை ஒழிப்பு, சூதாட்டம் தடை செய்தல் போன்றவைகளை கொள்கையாக கொண்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் இவ்வாறு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கைது ஆனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: துறையூர் கனரா வங்கியில் ரூ.41 லட்சம் மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது