தேனி: தேனி அன்னஞ்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று (செப்.05) மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தில் வறுமை நிலையில் அரசுப்பள்ளியில் பயின்று வரும் ஆறு மாணவிகளுக்குத் தலா 20 ஆயிரம் வீதம் ரூபாய் என ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலையை கவிஞர் வைரமுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் கவிஞர் வைரமுத்து, தனக்கு தமிழ் பயிற்றுவித்த ஆசிரியர்கள் முத்துகிருஷ்ணன் மற்றும் உத்தமன் ஆகியோரை கவுரவித்தார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, 'தமிழ்நாடு முதலமைச்சர், அரசுப்பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிக்கொண்டிருக்கும் நாளான நாளில் (செப்.05) நானும் கல்வி உதவித்தொகை வழங்கியதில் எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லை.
வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1960 முதல் 69ஆம் ஆண்டு வரை தான் பயின்றபோது தமிழ் இலக்கியம், இலக்கணம் கற்றுத்தந்த இரண்டு ஆசிரியர்களும் இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கிறார்கள்.
ஆசிரியர் தினத்தன்று என் ஆசிரியர்கள் என் விழாவுக்கு வந்திருப்பது எனக்கு கிடைத்த வாழ்த்தாக கருதுகின்றேன்' என நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அரசு இடத்தை சொந்த மகளுக்கு பட்டா போட்டுகொடுத்த விஏஓ... ஆதாரங்கள் வெளியானதால் பரபரப்பு