தேனி: பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த மதுக்கடைகள் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஓராண்டாகப் பெரியகுளம் தென்கரைப் பகுதியில், அரசு அனுமதியுடன் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் 3 தனியார் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.
பெரியகுளம் வடகரை பகுதியில் மதுபான கடைகள் இல்லாத நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பாக புதிய பேருந்து நிலையம் எதிரே அரசு அனுமதியுடன் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபான கடை செயல்படத் தொடங்கியது. ஆனால் ஒரு சில அமைப்பினர் அந்தப் பகுதியில் புதிதாகச் செயல்பட்ட தனியார் மதுபான கடையை எதிர்த்துத் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் மதுபான கடை மூடப்பட்டது.
இந்நிலையில் மூடப்பட்ட தனியார் மதுபான கடையைத் திறக்க வேண்டும் எனப் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மது குடிப்போர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “பெரியகுளம் தென்கரை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து நிறுத்த பகுதியில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மூன்று மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.
வடகரை பகுதியில் மதுபான கடைகள் இல்லாததால் அவற்றை வாங்குவதற்காக, செல்லும் மது குடிப்போர் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. ஆகையால் மது குடிப்போரின் நலம் கருதி பெரியகுளம் வடகரை பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் மதுபான கடையைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்” என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: வீடியோ: "பார்" ஆக மாறிய சேலம் ரயில்வே நடைபாதை