நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்திலுள்ள 16 வார்டுகளில், திமுக -8, அதிமுக -6, அமமுக -1, தேமுதிக -1 என வெற்றிபெற்றன. இதனையடுத்து அமமுக ஆதரவுடன் பெரியகுளம் ஒன்றியத்தைக் கைப்பற்றி விடலாம் என கணக்குப்போட்டு வந்த நிலையில், 8ஆவது வார்டில் வெற்றிபெற்ற திமுக கவுன்சிலர் செல்வம் என்பவர் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதனால் திமுகவின் பலம் குறைந்தது.
இதனையடுத்து கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஒன்றியத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில், அதிமுகவினர் யாரும் பங்கேற்காததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பங்கேற்காததால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று நடைபெறவிருந்த மறைமுகத் தேர்தலுக்கு அதிமுக, திமுக, தேமுதிக, அமமுக கட்சியின் சார்பில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் யாரும் வருகை தரவில்லை. இதனால் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் (கோரம்) இல்லாததால் மூன்றாவது முறையாக பெரியகுளம் ஒன்றியக் குழு தலைவருக்கான தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலரான சினேகா அறிவித்தார்.