தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள பெரியகுளம் கண்மாய் நீரினை பயன்படுத்தி அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் கண்மாயில் மூன்றில் ஒரு பங்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளை செல்வந்தர்கள் சிலர் ஆக்கிரமித்து மா, தென்னை, கரும்பு உள்ளிட்டவைகளை பயிர் செய்து விவசாயம் செய்து வருகின்றனர்.
மேலும் சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் தற்போது சிலரின் ஆக்கிரமப்பால் 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயாக காட்சியளிக்கிறது. இதனால் குளத்தில் முழு அளவு நீர்தேக்க முடியாத நிலையும், விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த வடகிழக்குப் பருவ மழையால், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கண்மாய்கள், குளங்கள் நிறைந்து வருகிறது. அதேபோல் பெரியகுளம் கண்மாயில் நீரின் முழுக்கொள்ளளவை எட்ட விடாமல் ஆக்கிரமிப்பாளர்கள் மதகுகளை திறந்து நீரை வெளியேற்றி விடுகின்றனர். இதன் காரணமாக பெரியகுளம் கண்மாய் அதன் முழு கொள்ளளவை எட்டாமல் உள்ளதாக பாசன விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து பெரியகுளம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும் உடைக்கப்பட்ட மதகுகளை சீர்செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்க:
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார ஆட்சியர்களுக்கு உத்தரவு