தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள கோத்தலூத்து ஊராட்சிக்கு உட்பட்டது மணியாரம்பட்டி கிராமம். பல்வேறு சமுதாயத்தினர் வசித்துவரும் இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்களும் உள்ளனர். கடந்த 40 வருடங்களுக்கு முன்பு இச்சமுதாயத்தினருக்கு அரசு சார்பில் 31 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது.
தற்போது அந்த வீடுகள் இடிந்து விழும் சூழலில் உள்ளது. மேலும் குடும்பங்கள் பெருகிவிட்டதால், ஒரு வீட்டில் மூன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணியாரம்பட்டி கிராம பட்டியலின மக்கள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
மேலும் தொகுப்பு வீடுகள் கட்டி தருவதற்கான இடங்களையும் கிராம மக்கள் பார்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தங்களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்க அரசு முன்வராததால், அப்பகுதி பட்டியலின மக்கள் மலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி - ஏத்தக்கோவில் சாலையில் உள்ள லக்கல கரடு மலையடிவாரத்தில், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் கிராம மக்கள் குடிசை அமைத்து தங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த ஆண்டிபட்டி வட்டாட்சியர் சந்திரசேகர் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மேக்கிழார்பட்டி அருகே உள்ள அரசு இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் ஆண்டிபட்டி பகுதியில் சில மணி நேரங்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது