தேனி: தமிழ்நாடு- கேரள எல்லைப் பகுதியில் உள்ள குமுளி சாலை அதிக வளைவுகள் கொண்ட மலைப்பாதையாகும். இந்த சாலை லோயர்கேம்ப்பில் இருந்து குமுளி வரை சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் நீள்கிறது.
சபரிமலைக்கு செல்பவர்கள் தேனி வழியாக குமுளி மலைச்சாலையை பயன்படுத்திதான் சென்று வருகிறார்கள். அதேபோல் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு தோட்ட வேலைக்குச் செல்பவர்களும் இந்த சாலையைப் பயன்படுத்துகிறார்கள்.
அதனால் இந்த சாலையில் வழக்கத்தை விட வாகனப் போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன. அண்மையில் குமுளி மலைச்சாலையில் சபரிமலைக்குச் சென்று திரும்பிய வாகனம் விபத்துக்குள்ளாகி 8 பேர் பலியாகினர்.
சாலைத் தடுப்புகள் சிறியதாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. சாலைத்தடுப்பு சுவர்கள் சிறியதாக இருப்பதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.
இதனால், குமுளி மலைச்சாலையில் உள்ள தடுப்புச் சுவர்களின் உயரத்தையும், அவற்றின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் சாலைகளில் ஒளிரூட்டும் ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:கட்டி முடித்து ஓராண்டு நிறைவு.. வீடுகளுக்காக காத்திருக்கும் தேனி மலைவாழ் மக்கள்!