தேனி: தேனி புதிய பேருந்து நிலையம் பகுதி தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. மேலும் இந்த பகுதியைச் சுற்றி அரசு அலுவலகங்கள், ஏராளமான உணவகங்கள், வணிக கடைகள் மற்றும் மருத்துவமனைகள் அமைந்துள்ளன. ஆனால், இதற்கு இணையாக அப்பகுதியை சுற்றி மூன்றுக்கும் மேற்பட்ட அரசு மதுபானக் கடை இயங்கிறது.
மேலும், புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையைக் கடந்து தான் தனியார் மருத்துவமனை, தங்கும் விடுதிகளும் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் பெண்கள் மற்றும் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையை நாடும் பொதுமக்கள் மதுபானக் கடையை தாண்டி தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருக்கின்றது.
அப்பகுதியில் செயல்படும் மதுபானக் கடையினால் ஏராளமாக மதுப்பிரியர்கள் அந்த பகுதி முழுவதையுமே மதுபான பாராக மாற்றி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி கடையில் மதுபானத்தை வாங்கி அங்கேயே குடித்துவிட்டு, குடிபோதை தலைக்கு ஏறிய நிலையில் சாலை நடுவே அரைகுறை ஆடையுடன் படுத்து உறங்குவதும், மருத்துவமனைக்கு முன்பு உறங்குவது போன்ற செயலால் பெண்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது.
இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அப்பகுதியில் செல்ல மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் மருத்துவமனைக்கு அருகில் மதுபான கடை செயல்படக்கூடாது என்பது அரசின் விதிமுறை. ஆனால் தற்போது அந்த விதிமுறைகள் எங்கே என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான பாரை, வேறு பகுதிக்கு மாற்றி பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.