தேனி மாவட்டம் போடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வந்தனர். வனப்பகுதிக்குள் வசித்து வந்த இவர்களுக்கு 2011ஆம் ஆண்டு சிறைக்காடு என்ற இடத்தில் அரசு, குடியிருப்புகள் கட்டித்தந்தது. இதனால் இவர்கள் அங்கு இடம் பெயர்ந்தனர். இதனையடுத்து, இவர்களது குடியிருப்பு அருகாமையிலேயே போடி நகராட்சி குப்பை கிடங்கை அமைத்தது.
குப்பை கிடங்கிற்கு அருகாமையில் வசித்து வந்ததால் மலைவாழ் மக்களுக்கு உடல் உபாதைகள், நோய் தொற்று போன்ற பல சிரமங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், இந்த குடியிருப்புகளுக்கு மின்சார வசதியினை அரசு ஏற்படுத்தி தரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் எந்த ஒரு நடிவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொறுமையிழந்த மலைவாழ் மக்கள் தங்களது குடியுரிமைகளான ரேசன் கார்டுகள், ஆதார் அட்டைகள் உள்ளிட்டவைகளை எறிந்தனர். பின்னர் குடியிருப்புகளை விட்டு மீண்டும் மலைப்பகுதிக்கு குடிபெயர்வதாக கூறி உடைமைகளுடன் சென்றனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போடி வட்டாட்சியர் அலுவலர்கள் மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்ததையடுத்து மலைப்பகுதியில் குடியேரும் போராட்டத்தை கைவிட்டு தங்களது குடியிருப்பிற்கே மீண்டும் சென்றனர்.