தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது குச்சனூர் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆரம்பக்கல்வி பயின்றுவருகின்றனர். இந்நிலையில் கடந்த ஓரு வருடத்திற்கு முன்பு இந்த பள்ளியின் கட்டடங்கள் சிதலமடைந்துள்ளதாக தெரிவித்து சில வகுப்பறை கட்டடங்களை மாவட்ட கல்வித் துறை இடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது ஒரு வருடம் ஆகியும் புதிய கட்டடம் கட்டுவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், இருக்கின்ற ஒரு வகுப்பறையில் மட்டும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் சிரமத்துடன் படித்து வந்துள்ளனர்.
இந்த சூழலில் கடந்த மூன்று நாட்களாக தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக வகுப்பறையில் உள்ள சுவர்கள் ஈரமாகத் தொடங்கியது.
மேலும் நேற்றிரவு பெய்த மழையால் பள்ளியின் வகுப்பறையில் மழை நீர் சூழ்ந்து தற்போது குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனை உடனடியாக சரி செய்து புதிய கட்டடம் கட்டித் தரக்கோரி, பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சித் துறை, வருவாய் துறை அலுவலர்கள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தற்காலிகமாக சாலை மறியலை கைவிட்டனர். மேலும், மூன்று மாத காலத்திற்குள் புதிய வகுப்பறைகள் கட்டிக்கொடுக்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர்.