தேனி: அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் தற்போது முகாமிட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், அவரை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில். ஒ.பன்னீர்செல்வத்தால் நியமிக்கபட்ட தென்காசி, திருநெல்வேலி, திருவாரூர் மாவட்ட செயலாளர்கள், தங்களது ஆதரவாளர்களுடன் வந்து பெரியகுளத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அவரிடம் நேற்று (ஆக. 6) ஆசி பெற்றனர். பின்னர் மாவட்ட செயலாளர்களுடன் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனிடையே, ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், "எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை குழப்பத்தில் வைத்துள்ளார். அவருக்கு மக்கள் செல்வாக்கு இருந்தால் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நின்று ஜெயித்து காட்டுட்டும். அதிமுகவில் உள்ள தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கமே உள்ளனர்" என தெரிவித்தார்.
சமீபகாலமாக அதிரடி அரசியலில் இறங்காமல் அமைதி காத்து வந்த ஒபிஎஸ் மீண்டும் அதிரடி நடவடிக்கையில் இறங்க உள்ளதாகவும், இதற்காகதான் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை!!