தேனி நாடாளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் இன்று காலை 9 மணிக்கு பலமேடு மஞ்சமலை கோவிலில் பரப்புரை மேற்கொண்டார். இதில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் ஆர் பி. உதயகுமார் கலந்து கொண்டனர். மஞ்சமலை கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டிளிக்கையில் கூறியதாவது:
அதிமுக சார்பாக போட்டியிடுகின்ற கூட்டணியில் 40 நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர்கள் கூட்டணி சார்பாக அறிவிக்கப்பட்டு, இன்றைக்கு தமிழகம் உள்பட தேனி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் தேர்தல் பரப்புரை முழுமையாக வெற்றி பெறுவதற்கும், மக்களுடைய நல்லாதரவை பெற்று மகத்தான வெற்றியைப் பெறுவதற்கும், போட்டியிடும் 40 வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கும் அருள்மிகு அய்யனார் சுவாமி திருக்கோவிலுக்கு நாங்கள் முதற்கட்ட பரப்புரையை வழிபட்டுத் தொடங்கியுள்ளோம்.
மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நல்லாசியுடன் அதிமுக சார்பாக போட்டியிடுகின்ற 40 வெற்றி ஏற்பாடுகளும் மாபெரும் வெற்றியை அடைவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது:
தேர்தல் அறிக்கை நேற்று வெளியானதையடுத்து, கூடுதலாக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?
பொதுவாக, நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலானாலும் பொதுத்தேர்தலை ஒட்டி பொதுமக்களுடைய பாதுகாப்பிற்கு, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை அதிமுக நிறைவேற்றும். இந்தத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிக்கையும் நிறைவேற்றுவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுத்து, அதனை நிறைவேற்றும் என்று உறுதியளிக்கிறேன்.
தர்மயுத்தத்தில் தங்களுக்கு ஆதரவு தெரிவித்த 10 எம்.பிக்களைத் தவிர மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறத பத்தி என்ன நினைக்கிறீர்கள்?
அதிமுகவைப் பொருத்தவரைக்கும் அனைவருக்கும் ஒவ்வொருத் தேர்தலிலும் வாய்ப்பு கிடைக்கும். அடிமட்ட தொண்டர்கள் முதல் யார் வேண்டுமானாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் வாய்ப்பு கிடைக்கும்.
அமமுகவின் ஓட்டு அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
அதிமுக இயக்கத்திற்கு எந்த பாதிப்பும் வராது. ஏனென்றால், இந்த இயக்கத்தை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொண்டர்களின் இயக்கமாகத்தான் உருவாக்கினார்கள். இதுவரை ஆட்சி கட்டிலில் 28 வருடங்களாக நல்லாட்சி நடத்தி வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களும் அதிமுக-வைத் தான் முழுமையாக நம்பியிருக்கின்றார்கள். இந்த மகத்தான கூட்டணி அந்த வகையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் உறுதியாக வெற்றி பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக வாரிசுக் கட்சிகள் என்று விமர்சனம் செய்கிறார்களே. அதைப்பற்றி தங்களின் கருத்து என்ன? வாரிசுகள் சட்டப்பூர்வமாக அரசியலுக்கு வரக்கூடாது என்று சட்டம் இல்லை. அவரவர் தகுதியின் அடிப்படையில் மக்கள் ஏற்றுக் கொண்டால் அவர்கள் வருவதற்கு தடை உண்டு என்று எந்த அரசியலமைப்புச் சட்டத்திலும் இல்லை.