தேனி மாவட்டம் போடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நாகலாபுரம் கிராமத்தில் இன்று அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நகரும் நியாய விலைக் கடை வாகனத்தை கொடி அசைத்து தொடங்கிவைத்தார். மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 178 பயனாளிகளுக்கு ரூ.3.88 கோடியில் கடன் தொகையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்.எல்.ஏ.ஜக்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழாவில் பங்கேற்பதற்காக பெரியகுளத்தில் இருந்து தேனி வழியாக வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை அரண்மனை புதூர் விலக்கு பகுதியில் "நாளைய முதல்வரே" என 100அடி நீளத்தில் பேனர் வைத்து அதிமுகவினர் வரவேற்றனர். இதனையடுத்து நாகலாபுரத்தில் விழா நிறைவடைந்து காரில் செல்லும் போது "அம்மாவின் அரசியல் வாரிசு - அய்யா ஓபிஎஸ்" என்று அதிமுகவினர் கோஷமிட்டனர்.
முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முன்னுசாமி கூறியிருந்த நிலையில், நாளைய முதல்வர் என 100அடி பிளக்ஸ், அம்மாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ் என்ற பேனர் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "நாளைய முதல்வரே" 100அடியில் ஃப்ளெக்ஸ்... ஆதரவு அலையில் ஓபிஎஸ்!