தேனி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், தற்போது கட்சி பெயர், கொடி மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஓபிஎஸ் தலைமையில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில், மாவட்டம் வாரியாக தொண்டர்களைச் சந்தித்து கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, தேனியில் நேற்று (ஜன.11) தொண்டர்கள் உரிமை மீட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் தேனி மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கட்சிக் கொடி மற்றும் சின்னம் பயன்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "கட்சிக் கொடி, சின்னம் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்காலத் தடைதான் விதித்திருக்கிறது. கட்சி வேஷ்டி, துண்டு, கொடி, சின்னம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தவிடாமல் தடுக்கலாம். ஆனால், எங்கள் உடலில் இருப்பது அதிமுக ரத்தம், அதை யாராலும் மாற்ற முடியாது" என்று பதிலளித்தார்.
இதனை அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சி செய்யும் மோடி தலைமையிலான பாஜக அரசு, ஏராளமான நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. அதனடிப்படையில், இந்தியாவின் பிரதமராக மீண்டும் மோடி வர வேண்டும் என்று, பாஜகவுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறோம்.
10 ஆண்டுகளாக நாங்கள் பாஜகவுக்குத்தான் ஆதரவு அளித்து வருகிறோம். எந்த இடத்திலும் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. சிறுபான்மையினர் பாதுகாப்புடன்தான் இருக்கிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் கூட நிலைமை மாறியிருக்கிறது. சிறுபான்மையினர் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்" என்று கூறினார்.
மேலும் தொடர்ச்சியாகப் பேசிய அவர், "ஈரோடு இடைத்தேர்தலில், கொங்கு மண்டலத்தில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டதால்தான் நானும், டி.டி.வி தினகரனும் எங்கள் வேட்பாளர்களை வாபஸ் பெற வைத்தோம். ஆனால் 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வி அடைந்தது. இந்த தோல்வி எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட தோல்வி. டி.டி.வி தினகரன், சசிகலா ஆகியோருடன் இணக்கமாகத்தான் இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும் ஓபிஎஸ்-இன் வற்புறுத்தலினாலேயே சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக கையெழுத்து போடப்பட்டது என்று இபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு, "சிஏஏ-வுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பில் வாக்களிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வீட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடந்தது. அவர்தான் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்களிக்கச் சொல்லி அனுப்பி வைத்தார். தற்போது நிலைமைக்கு தகுந்தாற்போல் மாற்றி மாற்றி எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அவர் சொல்வதெல்லாம் பொய்." என ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் அடையாளத்தை திமுக மறைக்கப் பார்க்கிறது..! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!