தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையால் சூழப்பட்ட பகுதியாகும். இந்த மலைப்பகுதியை யானை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்விடமாகக் கொண்டுள்ளது. இவற்றில் தேவாரம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து வரும் ஒற்றை பெண் காட்டு யானை பல ஆண்டுகளாக விவசாயிகளை அச்சுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளா வனப்பகுதியில் சுற்றித்திரியும் இந்த யானை, உணவிற்காக இரவு நேரத்தில் தேவாரம் பகுதியில் உள்ள விளை நிலத்திற்குள் புகுந்து தென்னை, கப்பை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தோட்டத்தில் இருக்கும் விவசாயிகளையும் தாக்கி வந்தது.
ஒற்றை காட்டு யானை தாக்கியதில் இதுவரை தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த 13 நபர்கள் கடந்த 10 ஆண்டுகளில் உயிரிழந்தனர். உயிர்ப்பலி ஏற்படுத்தி வரும் ஆட்கொல்லி யானையை பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட கும்கி யானைகளின் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
இதனால் அப்பகுதி விவசாயிகள் இரவு நேரங்களில் தோட்டத்தில் தங்குவதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில், தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டியை சேர்ந்த மூதாட்டி மயில்தாய்(60) என்பவர் ரெங்கநாதர் கோயில் மலை கரடு பகுதியை ஒட்டிய மேய்ச்சல் நிலத்தில் இன்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது வனத்தில் இருந்து வந்த ஒற்றை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த தகவல் அறிந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை எடுத்து வந்தனர். பின்னர் சடலத்தை கைப்பற்றிய வனத்துறையினர் உடற்கூறாய்விற்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே தொடர்ந்து யானை தாக்கி அப்பாவி மக்கள் உயிரழந்து வருவதை கண்டித்து அப்பகுதியினர் வனத்துறை மற்றும் வருவாயத் துறையினருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அரசு அலுவலர்கள் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானம் செய்தனர்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் ஒற்றை காட்டுயானையின் தாக்குதல் இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு நேற்று வரை உயிர்ப்பலி இல்லாததால் தேவாரம் பகுதி மக்கள் நிம்மதி அடைந்திருந்தனர். தற்போது மீண்டும் ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம் ஆரம்பமானதால் தேவாரம் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 14 நபர்களை உயிர்ப்பலி ஏற்படுத்திய ஒற்றை காட்டு யானையை பிடித்து முகாம் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.