மதுரை மாவட்டம் கரையான்பட்டியைச் சேர்ந்தவர் குபேந்திரன்(55). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக வீட்டை விட்டு இவர் வெளியேறி, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை ஆற்றங்கரையோரம் குடிசை வீட்டில் வசித்துவந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கால் அகற்றப்பட்ட நிலையில் வீட்டில் படுத்த நிலையிலேயே ஓய்வெடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், குபேந்திரன் அவரது வீட்டில் இன்று கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிபட்டி காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.
மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கொலை நடந்த வீட்டில் இருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் உள்ள டீக்கடையில் போய் நின்றது. வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அதன்பின்னர் குபேந்திரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இறந்த குபேந்திரனுக்கு கரையான்பட்டி கிராமத்தில் ஏராளமான சொத்துக்கள் இருப்பதால் சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.