தேனி: தேனி அருகே உள்ள வீரபாண்டியில் வசித்து வருபவர், குருவம்மாள் என்ற மூதாட்டி. இவரது கணவர் பொன்னையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், மூதாட்டி தனது வாரிசுகளுடன் நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு குடிசை அமைத்து வசித்து வருவதாகவும், தற்போது வறுமை நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டது. அந்த வகையில், பொன்னையா - குருவம்மாள் தம்பதிக்கும் கடந்த 1973ஆம் ஆண்டு நிலம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் பொன்னையா தம்பதியினர், கடந்த 2004ஆம் ஆண்டு வரை விவசாயம் செய்து வந்ததாகவும், பொன்னையா இறந்த பிறகு விவசாயம் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பொன்னையா - குருவம்மாளுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, போலியாக பட்டாக்களை தயார் செய்து, அவர்கள் பெயருக்கு நிலத்தை மாற்றம் செய்து விட்டதாக குருவம்மாள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 2004 வரை விவசாயம் செய்யப்பட்ட நிலத்தை, சில அதிகாரிகள் துணையுடன், தரிசு நிலமாக மாற்றியதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த நிலம் பொன்னையா மற்றும் குருவம்மாள் தம்பதிக்குச் சொந்தமானது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சான்று பெற்றிருப்பதாகவும், பின்னர் இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் பட்டா பெறுவதற்காக சென்றபோது, இது உங்களுடைய நிலம் இல்லை எனவும், நிலம் உங்கள் பெயரில் எனவும் பொய்யான தகவல் தருவதாகவும் கூறுகின்றனர்.
எனவே, குருவம்மாளுக்கு அரசு வழங்கிய பஞ்சமி நிலத்தை மீட்டுத் தர வேண்டும் எனவும், பஞ்சமி நிலத்தை போலி பட்டா மூலம் ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீதும், அதனைத் தடுக்க தவறிய மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.