தேனி : தமிழ்நாடு முன்னாள் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக் குறைவால் செப்டம்பர் 1ஆம் தேதி காலமானார்.
அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (செப்.15) ஓ.பி.எஸ்-ஐ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மலர் தூவி மரியாதை
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு நேரில் சென்ற சபாநாயகர் அப்பாவு, அங்கு வைக்கப்பட்டிருந்த ஓ.பி.எஸ் மனைவியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
சபாநாயகர் அப்பாவு உடன் வந்திருந்த திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணக்குமார் உள்ளிட்ட திமுகவினரும் ஓபிஎஸ்க்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : ’அனிதா மரணத்தின்போது இருந்த அதே மனநிலையில் இருக்கிறேன்’ - முதலமைச்சர் உருக்கம்!