தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை அதிமுக தலைமைக் கழகம் அறிவித்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் தேனி மாவட்ட எல்லையான கெங்குவார்பட்டியில் இருந்து தனது பிரசாரத்தை அவர் தொடங்கினார். இதனைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் தலைமையில் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோருடன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார். தேனி தொகுதிக்கு அமமுக வேட்பாளராக தங்க தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவிற்கு போட்டி என யாரும் கிடையாது எனத்தெரிவித்தார்.மேலும் தொகுதி மக்களிடம் சென்று கருத்துகள் கேட்டறிந்த பின்னர் தனது தேர்தல் வாக்குறுதியை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.