தமிழ்நாட்டில், தேனி உள்ளிட்ட மூன்று இடங்களில் புதிதாக அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதன் தொடக்கமாக, தேனியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரியை துணை முதமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இக்கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு 80 மாணவர்களும், மூன்றாண்டு படிப்பிற்கு 80 மாணவர்களும் என மொத்தம் 160 மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏதுவாக தேனி அருகே வீரபாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறைகள் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், "தேனியில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டுமென சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கேட்டுக்கொண்ட இரண்டே நாட்களில் தேனியில் சட்டக் கல்லூரி தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. தேனியில் சட்டக் கல்லூரி அமைக்க காரணகர்த்தாவாக இருந்தவர் சி.வி. சண்முகம்தான் நான் இல்லை. மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எட்டு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேனியில் தொடங்கப்பட்டுள்ள சட்டக்கல்லூரி தமிழ்நாட்டின் 14ஆவது சட்டக்கல்லூரி ஆகும்.
சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபடாமல் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் செலுத்த வேண்டும்” என்றார்.
தேனியில் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளதால் இனி தேனி மாணவர்கள் மதுரை, சென்னை போன்ற வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில் என்பதால் அம்மாவட்ட மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.