தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள ரஹமத் மஸ்ஜித் பள்ளி வாசல் முன்பாக இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக இஸ்லாமியர்கள் 30 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றிரவு தேனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியிலும் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்வி மற்றும் பெரியகுளம் சார் ஆட்சியர் சினேகா உள்ளிட்ட அலுவலர்கள் போராட்ட குழுவினரிடம் பேச்சு வாரத்தை நடத்தியும் சாலை மறியலை கைவிடாமல் தொடர்ந்தனர்.
தமிழக அரசு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று பேச்சுவார்த்தை நடத்திய அலுவலர்களிடம் தெரிவித்தனர். இதனால் இந்த சாலை மறியலால் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு முழுதும் நடைபெற்ற போராட்டத்தையொட்டி அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் சாலை மறியலில் ஈடுபட்ட இஸ்லாமியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலில் பெரியகுளம், தேவதானப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர்.