தேனி மாவட்டம் உத்தமபாளையம் அதிக அளவிலான இஸ்லாமியர்கள் வாழும் பகுதி. இங்குள்ள அரசு பள்ளியில் பயிலும் இஸ்லாமிய மாணவர்கள், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மதிய நேரத்தில் ஜூம்மா என்னும் சிறப்பு தொழுகை செய்வதற்காக பள்ளியில் இருந்து அருகே உள்ள மசூதிக்கு சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் இந்த இஸ்லாமிய மாணவர்கள் பள்ளிக்குச் சென்று தொழுது விட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த பள்ளி மாணவர்களை இன்று தொழுகை முடித்துவிட்டு மீண்டும் வந்தபோது, சில இந்து அமைப்பினர் புகைப்படம் எடுத்து அவர்களை அச்சுறுத்தியதாகவும், பள்ளி வேளையில் நீங்கள் தொழுவதற்கு செல்லக்கூடாது என கூறியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து இஸ்லாமிய அமைப்பின் கூட்டமைப்பு சார்பாக உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் உடனடியாக மாணவர்களை அச்சுறுத்திய நபர்களை கைது செய்ய வேண்டுமென இஸ்லாமிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் காவல்துறையினர் அவர்களை கைது செய்ய காலதாமதம் செய்து வந்ததாக இஸ்லாமிய அமைப்பினர் குற்றம்சாட்டினர். மேலும் காவல்துறையினருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் உத்தமபாளையம் பைபாஸ் பகுதியில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினைச் சார்ந்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இவ்வாறு அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக இஸ்லாமிய அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து உத்தமபாளையம் நகரில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இந்து, முஸ்லிம் பாகுபாடின்றி கொண்டாடப்படும் பூக்குழி திருவிழா!!