தென்மேற்குப் பருவமழை கடந்த ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து கேரளாவில் தீவிரமடையத் தொடங்கியது. இதனால் இடுக்கி மாவட்டம், தேக்கடியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.
தற்போது விநாடிக்கு 17 ஆயிரத்து 746 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர் மட்டம் இன்று (ஆகஸ்ட் 7) ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 130.00 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்த் தேக்க அனுமதிக்கப்பட்ட அளவு 142 அடியாகும். அதனால் அணையிலிருந்து தமிழ்நாடு பகுதிகளுக்கு விநாடிக்கு ஆயிரத்து 650 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்டம் வழியாக, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படுவதால், தேனி மாவட்ட ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கும் நீர்வரத்து 921 கன அடியாக அதிகரித்து இன்று ஒரே நாளில் 2 அடிவரை உயர்ந்து, தற்போது 32.55 அடியாக உள்ளது.
வைகை அணையின் மொத்த உயரம் 71 அடியாகும். அணையின் நீர் இருப்பு 480 மி.கன அடியாகும். இதில் மதுரை குடிநீர் தேவைக்காக தொடர்ந்து 72 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்படக்கூடும் என நம்பப்படுகிறது. இதனால் முல்லைப் பெரியாறு மற்றும் வைகைப் பாசன விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க...கரோனாவுக்கு குட்பை: வீடு திரும்பிய அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு