கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது. 152 அடி நீர்த்தேக்க கொள்ளளவு கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து, கடந்தாண்டு பெய்த பருவமழையினால் அணையின் நீர்மட்டம் 135 அடி வரை உயர்ந்தது. அணையில் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், இவ்வாண்டு எதிர்பார்த்த மழை பெய்யாததாலும் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் படிப்படியாகக் குறையத்தொடங்கியுள்ளது.
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே அணையின் நீர்மட்டம் 116 அடியாக சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 116.35 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 1970 மி.கன அடியாகவும் உள்ளது. வண்டிப்பெரியாறு, சப்பாத்து, வல்லக்கடவு உள்ளிட்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் சொல்லிக்கொள்ளும் அளவில் மழை பெய்யததால் தற்போது அணைக்கு நீர்வரத்தே இல்லாமல் போனது.
பொதுவாகக் கம்பம் பள்ளதாக்குப் பகுதியில் இருபோக சாகுபடி நடைபெறும். ஆனால், இவ்வாண்டு போதிய மழை பெய்யாததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதாலும் இரண்டாம் போக சாகுபடியில் விவசாயிகள் பெரிய அளவில் ஆர்வம் செலுத்தவில்லை. மேலும், கோடைகாலம் தொடங்கும் முன்பே இந்தநிலை உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ‘எங்களைப் போல் வெட்க மானம் பார்க்காமல் இருங்கள்’ - சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அமைச்சர் அறிவுரை