தேனி மாவட்டம், பெரியகுளம் - தென்கரை பகுதியில் உள்ள வசந்தி என்ற பெண், அவரது மகள் மனிஷா இருவரும் சேர்ந்து அகமலையில் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்கள் 57 நபருக்கு, பெரியகுளம் பகுதியில் உள்ள ஹெச்.டி.எப்.சி வங்கியில் கடன் வாங்கித்தருவதுபோல் ஏமாற்றியதாக, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் கடந்த வாரம் புகார் கொடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த தாய், மகளை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதிகம் படிப்பறிவு இல்லாத பழங்குடியின மலைவாழ் மக்களை நாடி அவர்களின் ஆதார், குடும்ப அட்டையை கொடுத்தால் வங்கியில் ஒருவருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வங்கிக்கடன் வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பல குழுக்களாக அமைத்து வங்கியில் மலைவாழ் பழங்குடி இன பெண்களை அழைத்துச் சென்று கை ரேகை வைத்து கடன் பெற்றுள்ளார்.
ஆனால், வங்கிக் கொடுத்த கடன் தொகையை பழங்குடி இன மலைவாழ் பெண்களுக்கு வழங்காமல், வங்கிக்கு வந்து கைரேகை வைத்ததற்காக 1000 ரூபாய் வழங்கி விட்டு, வங்கி வழங்கிய கடன் தொகை அனைத்தையும் வசந்தி, அவரது மகள் மனிஷாவே வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வங்கியில் பெற்ற கடனை தவணையாகக் கட்டும் நாள் வந்த போது, முதல் தவணையை அந்தப் பெண் கட்டியுள்ளார். ஆனால், அடுத்தடுத்து வந்த மாதத் தவணைகளை கட்டாமல் விடவே, வங்கி நிர்வாகம் பழங்குடி இன மலைவாழ் மக்களிடம் கடன் தொகையைக் கட்டக் கூறி, நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து மலைவாழ் மக்களுக்கு வசந்தி மற்றும் அவரது மகள் மனிஷா ஆகிய இருவரும் தங்களை ஏமாற்றியது தெரியவரவே அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் தாய் - மகள் இருவரும் சேர்ந்து இதுவரை பல்வேறு வங்கியில் 57 மலைவாழ் மக்களுக்கு 20 லட்சம் ரூபாய்க்கும் மேல் ஏமாற்றி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், 'தங்களின் அறியாமையைப் பயன்படுத்தி வங்கியில் கடன் வாங்கி, ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுத்து, வங்கியில் தங்கள் மீது வாங்கிய கடன் தொகையைக் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓட்டைப் பிரித்து 22 சவரன் தங்க நகைகள், ரூ.1.3 லட்சம் கொள்ளை