தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம். ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சாவை கேரளாவிற்கு குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு வழியாக கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது.
அதனை கட்டுப்படுத்த தமிழக காவல்துறையினர் எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் போடி அருகே ரெங்கநாதபுரத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாலையில் நடத்து சென்றவர் மீது மோதி நிற்காமல் விரைந்தது.
கார் மோதியதில் காயமடைந்த போதுமணி என்பவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அதனடிப்படையில் போடி – தேவாரம் சாலையில் விரைந்த காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய காரை தடுத்து நிறுத்தி காரில் இருந்தவரிடம் விசாரணை செய்தனர்.
அதில் விபத்து ஏற்படுத்தியவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (29) என்றும், அவர் சட்ட விரோதமான கஞ்சா கடத்தலில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் 26 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
பின்னர் போடி தாலுகா காவல் நிலையம் கொண்டுவரப்பட்டு அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தேனி வந்த சிலரிடம் கஞ்சா பெற்று அதனை கம்பம் வழியாக கேரளாவில் விற்பதற்காக கடத்திச் செல்வதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இவர் மீது கம்பம் பகுதியில் கஞ்சா வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போடி தாலுகா காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், 8 கிலோ கஞ்சா மற்றும் ரூ.26ஆயிரம் பணம் ஆகியவற்றை கைப்பற்றி சரவணனை கைது செய்துள்ளனர். மேலும் கஞ்சா கடத்தலில் வேறு யாரெல்லாம் தொடர்புடையவர்கள் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: