தேனி: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மண்டல அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் மதுரை அரசு வேளாண் கல்லூரி அணி முதலிடத்தையும், பெரியகுளம் தமிழ்நாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரி இரண்டாம் இடத்தையும் பெற்றன. இதனையடுத்து, வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்குத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் பரிசுகளையும், பாராட்டு கோப்பையையும் வழங்கினார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளைக் கோவை, தஞ்சாவூர், பெரியகுளம், கிள்ளிகுளம் என 4 மண்டலங்களாக நடந்த மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் பி பிரிவு மண்டலத்தில் தேனி, மதுரை, கரூர், திண்டுக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் வேளாண் கல்லூரிகளைச் சேர்ந்த 12 கல்லூரிகள் இடம் பெற்றன.
இந்த விளையாட்டுப் போட்டிகளானது, பெரியகுளத்தில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரி வளாகத்தில் கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, இக்கல்லூரிகளுக்கிடையே நடந்த விளையாட்டுப் போட்டிகளில் 1200 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
இதில் குழு விளையாட்டுப் போட்டிகள், தனிநபர் விளையாட்டு என அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றது. இறுதி நாளான இன்று (டிச.7) விளையாட்டுப் போட்டிகள் முடிவுற்ற நிலையில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவியருக்குப் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர் மாணவியருக்குப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ராஜாங்கம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
ஐந்து நாட்களாக நடந்த இப்போட்டிகளில் மதுரை தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலைக்கழக கல்லூரி அணி 173 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தையும், 92 புள்ளிகளைப் பெற்ற பெரியகுளம் தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இரண்டாம் இடத்தையும் பிடித்தன. மண்டல அளவில் வெற்றி பெற்ற முதல் இரண்டு இடங்களைப் பிடித்த கல்லூரி அணிகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கார்த்திகை தீபம்: லட்ச தீபத்தில் ஜொலித்த மீனாட்சி அம்மன் கோயில்!