தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் அமைந்துள்ளது மாவட்ட சிறைச்சாலை. இங்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நூறு பேர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 163 பேர் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரை திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு இச்சிறைச்சாலையில் கடந்த மே 20ஆம் தேதி தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 18 வயது இளைஞர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து தேனி மாவட்ட சிறையில் முதற்கட்டமாக கைதிகள், பணியாளர்கள் என 39 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில் யாருக்கும் நோய்த் தொற்று உறுதிசெய்யப்படவில்லை. தொடர்ந்து இரண்டாவது கட்டமாக இன்றும் 145 நபர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் மருத்துவ ஆலோசனையின் பேரில் வீட்டு தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறி அவரது குடும்ப உறுப்பினர்கள் நான்கு நபர்களுடன் தேனி மாவட்டத்திற்கு வந்தபோது திண்டுக்கல் - தேனி மாவட்ட எல்லையில் தேவதானப்பட்டி சோதனைச் சாவடியில் வாகன தனிக்கையின்போது தொற்று கண்ட நபரின் விபரம் தெரியவந்தது.
உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தொற்று கண்ட நபர் தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் அவருடன் பயணம் செய்த நான்கு பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தங்கள் பகுதிகளில் வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் குறிப்பாக சிவப்பு மண்டலப் பகுதிகளிலிருந்து எவரேனும் வந்திருந்து தனிமைப்படுத்துதலை மேற்கொள்ளாமலோ அல்லது தனிமைப்படுத்துதல் விதிகளை மீறி நடந்து கொண்டாலோ அவர்களின் விவரத்தை உடனடியாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 04546- 261093 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவை வென்ற தி.நகர் துணை ஆணையர்: காவல் ஆணையர் வாழ்த்து