தேனி: அரண்மனைபுதூர் பகுதியில் அருள்மிகு மகா சக்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று கும்பாபிஷேகம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட கிராமத்தில் வசிக்கும் ஒரு சமூகத்தினர், புதிதாக பல்வேறு சுவாமி சிலைகளை கோயில் வளாகத்திற்கு வைக்க முயன்றனர். இதற்கு மற்றொரு சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் இரு தரப்பு முக்கியஸ்தர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரண்டு முறை நடத்தப்பட்ட அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், நேற்று நள்ளிரவு காவல் துறையினர் கோயில் கும்பாபிஷேக பணிகளை உடனடியாக நிறுத்துமாறு எச்சரித்தனர். காவல்துறையின் உத்தரவின் பேரில் கும்பாபிஷேக பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கும்பாபிஷேகம் நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு சமூகத்தினர், கோயில் முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் கோயிலை சுற்றிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜை...