தேனி: சனிப்பெயர்ச்சி திருவிழாவினை முன்னிட்டு, குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் நேற்று (டிச.20) லட்சார்ச்சனை ஹோமம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்து பரிகார பூஜைகளை நிவர்த்தி செய்தனர்.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயிலான இங்கு சுயம்பு வடிவில், சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை புரிந்து நெய் விளக்கு ஏற்றி, பரிகாரங்களை செய்து இறை வழிபாடுகளை நடத்தி, தங்களின் ராசிக்கான பரிகார பூஜைகளை செய்து சனீஸ்வர பகவானை வழிபட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதனிடையே, நேற்று மாலை சுமார் 5.20 மணியளவில், சனீஸ்வர பகவான் சுத்த வாக்கிய பஞ்சாங்க முறைப்படி, அவிட்டம் நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில், மகர ராசியிலிருந்து தனது சொந்த வீடான கும்ப ராசிக்கு இடம் பெயர்வதால், சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு லட்சார்ச்சனை ஹோமம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். மேலும், இவ்விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.
அதேபோல், நேற்று புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனீஸ்வரனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றன. அதன்பின், ஸ்ரீ சனீஸ்வர பகவான் தங்க காகம் வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏரிகுப்பம் சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி கோலாகலம்.. லட்சக்கணகான பக்தர்கள் சாமி தரிசனம்!