கரோனா நோய் தொற்று பரவலால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மதுபானக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தொடர்ந்து 45 நாள்களுக்கு மேலாக மது கிடைக்காததால் சிலர் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கத் தொடங்கினர்.
இதனையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழ்நாட்டில் நேற்று முதல் மதுபானக்கடைகள் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால், மதுப்பிரியர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற 38 இடங்களில் மதுபானக் கடைகள் செயல்படத் தொடங்கின.
இன்று காலை முதலே விறுவிறுப்பாக விற்பனை தொடங்கியதும் ஆர்வத்துடன் மதுப்பிரியர்கள் மதுபானத்தை வாங்கிச் சென்றனர். இவற்றில் தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் உள்ள மதுபானக்கடையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் வேலாயுதம் என்பவர் தனது பேச்சால் மதுப்பிரியர்களின் கவனத்தை ஈர்த்தார்.
மது வாங்க வருபவர்கள் தகுந்த இடைவெளி விட்டு ஒருவரையொருவர் தொடாமல் நில்லுங்கள், கூட்டத்தில் ஒருவருக்கு கரோனா இருந்தால் அவர் மூலம் நமக்கும் நோய்த் தொற்று ஏற்படும். குடையுடன் நின்றால் தகுந்த இடைவெளி கிடைக்கும், எனவே நாளை முதல் மதுபானக் கடைக்கு வரும்போது குடையுடன் வாருங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக உங்களின் நலன் கருதியே அரசு மதுபானங்களை விற்கிறது. எனவே தினமும் வாருங்கள்! உற்சாக பானத்தை அருந்தி உற்சாகமாக இருங்கள்! என்றார். கொழுத்தும் வெயிலில் மணிக்கணக்கில் காத்திருந்த மதுப்பிரியர்களுக்கு காவலரின் இந்த சொற்பொழிவு உற்சாகத்தை தருவதாகவே அமைந்தது.
இதையும் படிங்க:கோவையில் முதல் ஆளாக மது வாங்கி சென்ற ஸ்பெயின் நாட்டவர்!