சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் கார்த்திகை 01ஆம் தேதி முதல் 48 நாள்களுக்கு ஒரு மண்டலமாகக் கணக்கிட்டு மண்டல பூஜை, அதனைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜை நடைபெறும்.
இதற்காக சன்னிதானம் செல்ல பக்தர்கள் கார்த்திகை மாதப் பிறப்பான இன்று (நவ. 16) மாலையிட்டு தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் பக்தர்கள் புனித நீராடி குருசாமி கைகளினால் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம்.
ஆனால் கரோனா நோய்ப் பரவலால் சுற்றுலாத் தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தேனி மாவட்டத்தில் நீடிப்பதால், அருவியில் குளிப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதன் காரணமாக புனித நீராட வருகைதந்த பக்தர்கள், அருவிக்கு கீழ் உள்ள ஆற்றங்கரையில் குளித்தனர். மேலும் சுருளி அருவியில் உள்ள ஸ்ரீஐயப்ப சுவாமி கோயில் உற்சவரை பல்லக்கில் சுமந்துவந்த பக்தர்கள் அருவியில் புனித நீராட்டாமல், ஆற்றங்கரையில் நீராட்டினர்.
அதன் பின்னர் வழக்கம்போல அங்குள்ள விநாயகர், ஆதி அண்ணாமலையார், பூத நாரயணன் கோயில்களில் வழிபாடு நடத்தினர். பிறகு கறுப்பு, காவி உடை அணிந்து, துளசி மாலை, சந்தன மாலைகளை சரண கோஷம் முழங்க குருசாமி கைகளால் மாலை அணிந்து பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.
மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி மறுப்பால் கார்த்திகை முதல் நாளான இன்று சுருளி அருவி பகுதியில் பக்தர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், “தேனி மாவட்டமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சபரிமலை செல்கின்ற பக்தர்கள் சுருளி அருவியில் நீராடுவது வழக்கம். ஆனால் தற்போது கரோனாவால் விதிக்கப்பட்டுள்ள தடையால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக அருவியில் குளிப்பதற்கு அனுமதி தர வேண்டும்” எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மேலும் சபரிமலையில் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக அனுமதிக்க தேவஸ்தான போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.