தமிழ்நாடு-கேரள எல்லையில் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ளது, மங்கலதேவி கண்ணகி கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பௌர்ணமியன்று சித்திரை முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகி விழா, பூமாரி விழா என முப்பெரும் விழா நடைபெறுவது வழக்கம். இருமாநில பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு - கேரள அரசுகள் இணைந்து நடத்துகின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா வரும் மே 7ஆம் தேதி கொண்டாடப்படுவதாக இருந்தது. ஆனால், கரோனா நோய்ப் பரவல் காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 10 (2) (1)-ன் படி இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, எல்லா விதமான நடவடிக்கைகளும் தடை செய்யப்படுவதாகவும், மத வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் 2020ஆம் ஆண்டு சித்ரா பெளர்ணமியன்று கண்ணகி கோயில் திருவிழாவை நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சூறைக்காற்றுடன் மழை : மரங்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனை