தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது சாதிக். இந்திய தேசிய லீக் கட்சியின் செயலாளராக உள்ள இவர், தனது ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்து– முஸ்லீம் மதத்தினரிடையே மோதல் ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முகம்மது சாதிக் மற்றும் உதுமான்அலி ஆகிய இருவரை விசாரணைக்காக காவல்துறையினர் கம்பம் வடக்கு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இதனையறிந்த முஸ்லீம் சமூகத்தினர் மற்றும் இயக்கத்தினர் கம்பம் வடக்கு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, அவர்களை விடுதலை செய்யக்கோரினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து, உத்தமபாளையம் துணைக் கண்காணிப்பாளர் சின்னக்கண்ணு தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
பின்னர் தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரன் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு எட்டப்படாததால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, முகம்மது சாதிக் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும், உதுமான்அலி மீது ஏதும் புகார் இல்லாததால் அவரை விடுதலை செய்வதாகவும் கூறினர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: சமூக வலைதள காணொலிகளை தணிக்கை செய்ய தனி வாரியம் கோரிய மனு - அக்.14 விசாரணை