தேனி: அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் ஜோ பைடன், துணை அதிபராக பதவி ஏற்கும் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இருவரது உருவங்களை தர்பூசணி பழத்தில் தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார் தேனியைச் சேர்ந்த காய்கனி சிற்பக்கலைஞர்.
தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன். காய்கறி சிற்பக்கலைஞரான இவர், முக்கிய தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பறவைகள் மற்றும் சாதனையாளர்கள் பலரது உருவங்களை தர்பூசணி பழத்தில் தத்ரூபமாக வரையும் திறமை படைத்தவர்.
இவரது பல சிற்பங்கள் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளன. அந்த வகையில் தற்போது ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோரது உருவங்களை தத்ரூபமாக செதுக்கியுள்ளார்.
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். அவருடன் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவி ஏற்க உள்ளார். பல கட்ட போராட்டத்திற்கு பிறகு வல்லரசு நாட்டின் தலைமைப் பொறுப்பை அலங்கரிக்க இருக்கும் இவ்விருவருக்கும் இந்தியா உள்பட உலக நாடுகளின் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் காய்கறி சிற்பக்கலைஞரான இளஞ்செழியனும், இரு தலைவர்களின் உருவங்களையும் தர்பூசணி பழத்தில் வரைந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தச் சிற்பம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: கடமையை செய்தால் மாற்றம் சாத்தியமாகும்- யார் இந்த கமலா ஹாரிஸ்!