தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள ஏழைகாத்த அம்மன், வல்லடிகாரர் சுவாமிகள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இது தேனி மாவட்டத்திலேயே நடைபெறும் முக்கியமான ஜல்லிக்கட்டாகவும் கருதப்படுகிறது.
இவ்வாண்டுக்கான ஜல்லிக்கட்டுப்போட்டி வரும் 16ஆம் தேதி நடைபெறுகிறது. அய்யம்பட்டி கிராம கமிட்டி சார்பாக நடத்தப்படும் இப்போட்டிக்கு, சில தினங்களே உள்ள நிலையில் வாடி வாசலுக்கு வர்ணம் பூசும் பணி முதல் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
இதில் பார்வையாளர்கள் அமரக்கூடிய கேலரி பகுதி, இரும்புத் தடுப்புகள், காளைகள் வெளியேறும் பகுதிகளில் தடுப்புகள் என அனைத்துப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. போட்டியில் பங்கேற்பதற்காக, தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 600 காளைகள் களம் காண உள்ளன. மேலும் மாடுபிடி வீரர்கள் 700 பேர் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க இன்சூரன்ஸ், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் முன்பதிவும் நடைபெறவுள்ளது. மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் போட்டியில் அனுமதிக்கப்பட உள்ளனர். சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் வீரர்களிடம் சிக்காத காளையின் உரிமையாளர்களுக்கு டிவி, கட்டில், பீரோ, குளிர்சாதனப்பெட்டி, தங்க காசு உள்ளிட்ட பொருட்கள் கிராம கமிட்டி சார்பாக பரிசளிக்க உள்ளனர்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் வர உள்ளனர். இது குறித்து கிராம கமிட்டித் தலைவர் கூறுகையில், 'கடந்தாண்டு 700 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, 600 காளைகள் மட்டுமே களத்தில் இறக்கி விடப்பட்டன. இதன் காரணமாக போட்டியின் நேரம் கருதி, இந்த ஆண்டு 100 காளைகள் குறைக்கப்பட்டுள்ளன' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருநல்லூர் ஜல்லிக்கட்டு - காளைகள் முட்டி 66 பேர் காயம்