தேனி மாவட்டம் சின்னமனூர், சீலையம்பட்டி, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி உள்ளிட்ட இடங்களில் 150 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளன.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயிரிடப்பட்ட செங்கரும்பை விவசாயிகள் சாகுபடி செய்துவருகின்றனர். இதனை வாங்குவதற்காக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் செங்கரும்பு விற்பனை அப்பகுதியில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், சிறப்பு வாய்ந்த சின்னமனூர் செங்கரும்பு சாகுபடி கடந்தாண்டு 250 ஏக்கர் பயிரிடப்பட்டன. இந்தாண்டு நான்கு வழிச்சாலையால் 100 ஏக்கர் நிலங்களை மாவட்ட நிர்வாகத்தினர் விவசாயிகளிடம் இருந்து பறிமுதல் செய்துவிட்டனர். இதனால் வெறும் 150ஏக்கர் மட்டுமே செங்கரும்பு பயிரிடப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து சின்னமனூர் கரும்பு விவசாயிகள் கூறுகையில், "கரும்பு பயிரிடுவதற்கு 1.5 லட்சம் வரை செலவாகிறது. ஆனால் செங்கரும்பு கட்டின் விலை ரூ.200 முதல் 250 வரை தான் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை போதுமானதாக இல்லை" என்றனர். மேலும், நான்கு வழிச்சாலையால் 100 ஏக்கர் கரும்பு சாகுபடி பாதிப்படைந்துள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொங்கல் விளைச்சல் அமோகம்... ஆனால் விலை இல்லையே? வருத்தத்தில் விவசாயிகள்!