கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது, இதனால் மதுபானக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் கள்ளச்சாராய விற்பனை தீவிரமடைந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வந்தாலும் கள்ளச்சாராயம் காய்ச்சும் பணி தொடர்கதையாக இருக்கிறது.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் டி.அணைக்கரைப்பட்டி பகுதியில் மலையை ஒட்டியுள்ள தோட்டத்தில் இருவர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு மூலப்பொருட்களை ஊறலில் போட்டு வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் டி.பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சின்னமுத்து (54), குருசாமி (49) இணைந்து கள்ளச்சாரயம் காய்ச்சுவது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்தில் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் கள்ளச்சாரயம் தரையில் ஊற்றி அழிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல் துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களுடன் வேறு யாரும் தொடர்பில் இருக்கிறார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: யூ-டியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய பாய்ஸ்...!